புத்ராஜெயா, ஜூலை 05-
15 ஆண்டுகளுக்கு முன்பு, திருநங்கை ஒருவரை கொடூரமாக கொலை செய்த குற்றத்திற்காக விதிக்கப்பட்டிருந்த சாகும்வரை தூக்கிலிடும் தண்டனையிலிருந்து, பழைய உலோக கடை முன்னாள் வியாபாரியான வி .ராஜா உயிர் தப்பினார்.
35 வயதுடைய அவ்வாடவருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குதண்டனைக்கு பதிலாக, 38 ஆண்டுகள் சிறையும் 12 பிரம்படிகளையும் வழங்கி, கூட்டரசு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அவ்வாடவர் செய்திருந்த மேல்முறையீட்டை ஏற்றுநாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவன் மார்ட் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, அத்தீர்ப்பை வழங்கியது.
ராஜா கைது செய்யப்பட்ட நாளான 2010ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து, அவருக்கான சிறைத்தண்டனை காலம் கணக்கிடப்படுவதாகவும் தெங்கு மைமு தமது தீர்ப்பில் கூறினார்.
கடந்த 2009ஆம் ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி, பின்னிரவு மணி 1க்கும் இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கோலாலம்பூர், ஸ்தாபக்-க்கிலுள்ள ஓர் இடத்தில், 42 வயதுடைய M. கண்ணன் எனும் திருநங்கையை கொலை செய்தது தொடர்பில், ராஜாமீது இதற்கு முன்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
தனது நண்பருடன் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த கண்ணனைக் கடத்திய ராஜா, அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பிறகு, கத்தியால் குத்தி கொலை செய்ததாக குற்றச்சாட்டில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராஜா அக்குற்றைத்தை புரிந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2012ஆம் ஆண்டில் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்தீர்ப்புக்கு எதிராக அவர் செய்திருந்த மேல்முறையீட்டை, கடந்த 2013ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுப்படி செய்த நிலையில், 2015ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் அத்தண்டனையை நிலைநிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.








