Aug 16, 2026
Thisaigal NewsYouTube
 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

Share:

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த 4 முக்கியக் கும்பல்களை அரச மலேசியப் போலீஸ் படையின் போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு அதிரடியாக முறியடித்துள்ளது. இதில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதன் இயக்குநர் கமிஷனர் டத்தோ உசேன் உமர் கான் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

ஆப் கெசிங்", "ஆப் மதாரிநி", "ஆப் எரிஸ்டாலிஸ்" மற்றும் "ஆப் வாஜா" ஆகிய 4 தொடர் அதிரடி நடவடிக்கைகளின் மூலம், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 16 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக, ஒரு போலீஸ் அதிகாரியும், ஒரு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரியும் இக்கும்பல்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளனர்.

செராஸ், காஜாங், கோம்பாக் கிள்ளான் உத்தாரா, செந்தூல் மற்றும் சபக் பெர்நாம் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், வப் திரவ வடிவிலான எம்டிஎம்ஏ, மெத்தம்பெட்டமைன், கெட்டமைன், எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் எரிமின் மாத்திரைகள் போன்ற பல வகையான போதைப்பொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன. இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு 67.3 மில்லியன் ரிங்கிட் ஆகும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

இக்கும்பல் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களைப் பழச்சாறுகள் மற்றும் ஆபரணங்கள் எனப் பொய் பிரகடனம் செய்து இறக்குமதி செய்துள்ளது. பின்னர், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு வீடுகளில் இவற்றைச் சேமித்து, உள்நாட்டுச் சந்தை மற்றும் அண்டை நாடுகளுக்குக் கடல் வழியாகக் கடத்தத் திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் -இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி விதிக்கப்படும். குற்றம் இழைத்தவர்கள் போலீஸ் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் டத்தோ உசேன் உமர் கான் எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த கும்பல் தங்கள் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக நம்பப்படும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

Related News