கோலாலம்பூர், நவம்பர்.23-
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வெள்ளம் வரக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிப்படைய வாய்ப்புள்ள பகுதிகளில் தேவையான கருவிகளுடன் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு அமைச்சரும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபடி, மலேசிய இராணுவம் காவற்படை உள்ளிட்ட அனைத்துப் பாதுகாப்பு அமைப்புகளும் தேசிய அளவில் முழுமையான தயார் நிலையை அடைந்துள்ளன. அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் வானிலை எச்சரிக்கைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், குறிப்பாக பள்ளி விடுமுறையில் சுற்றுலா செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஏற்கனவே, கிளந்தான், திரெங்கானு, கெடா, சரவாக் ஆகிய மாநிலங்களில் மட்டும் 2 ஆயிரத்து 534 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.








