ரெம்பாவ், டிசம்பர்.31-
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் விளம்பரப் பலகைகள் மூலம் பல இலட்சங்களை இலாபமாக ஈட்டும் 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வெறும் 1,250 ரிங்கிட் உரிமக் கட்டணத்தைச் செலுத்தாமல் ஏமாற்றி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனங்களின் சட்டவிரோதச் செயலால் உள்ளூர் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுவதைக் கண்டித்துள்ள ரெம்பாவ் மாவட்ட மன்றச் செயலாளர் Norazlyzan Ramli , சம்பந்தப்பட்ட 22 நிறுவனங்களுக்கும் தற்போது அதிரடியாக அபராதம் விதித்துள்ளதாகத் தெரிவித்தார்.
சிம்பாங் அம்பாட் முதல் செனாவாங் வரையிலான நெடுஞ்சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளை அடையாளம் கண்டு, அவற்றில் "அனுமதி இல்லை" என்ற ஸ்டிக்கர்களை ஒட்டி அதிகாரிகள் தற்போது அதிரடி வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால் எவ்வித பாரபட்சமுமின்றி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என Norazlyzan எச்சரித்துள்ளார்.








