Jun 28, 2026
Thisaigal NewsYouTube
வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

வழிப்பாட்டுத் தலங்களைக் கையாளும் விவகாரத்தில் பரஸ்பர மரியாதை வேண்டும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.11-

தவறான புரிதல்களைத் தடுக்கவும், தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தவும், வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்ற சமய விவகாரங்களைக் கையாள்வதில் பரஸ்பர மரியாதை மிகவும் அவசியமானது என மலேசிய மாமன்னர் மாட்சிமை தங்கிய சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

இஸ்லாமானது அனைத்து மக்களிடையேயும் பரஸ்பர மரியாதையை வலியுறுத்துகிறது, மேலும் பிற சமயங்களைப் பின்பற்றுபவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வழிபாட்டு முறைகளை அது தடுக்காது என்று இன்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், மற்ற சமயங்களைப் பின்பற்றுபவர்களும் இஸ்லாத்தை மதிக்க வேண்டும் என்றும் மாமன்னர் குறிப்பிட்டுள்ளார்.

மசூதிகள் மற்றும் தேவாலயங்களின் கட்டுமான நிர்வாகம், சட்ட விதிமுறைகள் மூலம் கையாளப்பட வேண்டும் என்று தான் கூறிய கருத்துகளை அரசியலாக்குவதற்கு எதிராகவும் சுல்தான் இப்ராஹிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் ஜோகூரில் ஒரு வழிபாட்டுத்தலம் இடிக்கப்படும் விவகாரத்தில், மத்தியஸ்தம் செய்ததில் தனது பங்களிப்பையும் மாமன்னர் சுட்டிக் காட்டினார்.

தான் அந்த விவகாரத்தில் மிகவும் சுமூகமாகத் தீர்த்து வைத்ததாகவும், அனைத்துத் தரப்பினரையும் சட்டத்திற்கு இணங்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக, உரிய அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்படுவது குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.

கடந்த சனிக்கிழமை சட்டவிரோத வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரான சில தரப்பினரின் பேரணி அதன் முக்கிய உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News