கோலாலம்பூர், அக்டோபர்.25-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூருக்கு வருகையின் போது அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வரி விகிதம் உயர்த்தப்படாது என்று மலேசியா நம்பிக்கை கொண்டுள்ளது.
47 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் கலந்து கொள்ளும் பட்சத்தில் அமெரிக்காவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் ஹசான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாடு தொடர்பாக இன்று சனிக்கிழமை நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் முகமட் ஹசான் இதனைத் தெரிவித்தார்.
மலேசியா, தற்போது 19 விழுக்காடு வரி சலுகையை அனுபவித்து வருகிறது. மின்சாரம் மற்றும் மின்னணுவியல் ஏற்றுமதிக்கு 0 ( சுழியம் ) வரியாகும். மின் உற்பத்தி சார்ந்த 60 விழுக்காட்டுப் பொருட்களை மலேசியா ஏற்றுமதி செய்து வருகிறது. நடப்பு வரி விகிதம் உயர்த்தப்படாமல் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுமானால் மலேசியா மகிழ்ச்சி கொள்ளும் என்று முகமட் ஹசான் குறிப்பிட்டார்.
மலேசியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு 25 விழுக்காடு வரியை அறிவித்த அமெரிக்கா, கடந்த ஆகஸ்ட் மாதம் அதனை 19 விழுக்காடாகக் குறைத்ததையும் முகமட் ஹசான் சுட்டிக் காட்டினார்.








