கோலாலம்பூர், செப்டம்பர்.19-
ஜாலூர் கெமிலாங் கொடியை தனது அகப்பக்கத்தில் குறைப்பாட்டுடன் வெளிட்டதற்காக சின் சியூ சீன நாளிதழுக்கும், போலீஸ் படைத் தலைவர் வெளியிட்டதாகக் கூறி, தவறான செய்தியைப் பிரசுரித்ததற்காக சீனார் மலாய் நாளிதழுக்கும் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணைமான எம்சிஎம்சி, தலா ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்து இருப்பது அதிகபட்சமானதாகும் என்று மலேசிய ஊடகவியலாளர் மன்றம் வர்ணித்துள்ளது.
துல்லியமான செய்தியும், அதன் முக்கியத்துவத்தையும், தேசியச் சின்னங்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தையும் தாங்கள் வலியுறுத்திய போதிலும் இரு நாளிதழ்களுக்கும் விதிக்கப்பட்ட அபராதத் தொகை, அவை புரிந்த குற்றத்தன்மைக்கு நிகராக இல்லை. தலா ஒரு லட்சம் ரிங்கிட் என்பது அதிகபட்சமானது என்று அது குறிப்பிட்டுள்ளது.
"இதுபோன்ற அதிகப்படியான அபராதங்கள் அச்சத்தின் சூழலை உருவாக்கி பத்திரிகையாளர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிகப்படியான சுய தணிக்கைக்கு வழிவகுக்கும்" என்று மலேசிய ஊடகவியலாளர் மன்றம் ஓர் அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.








