தங்காக், நவம்பர்.16-
ஜோகூர், மூவார்-சிகமா சாலையில் 33.5 வது கிலோமீட்டரில், அதிகாலை 2.20 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஐந்து வாகனங்கள் சின்னாபின்னமானதில், 56 வயதுடைய மைவி காரின் பெண் பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கோரச் சம்பவத்திற்குக் காரணம், கட்டுப்பாட்டை இழந்த ஒரு வேன் சாலையின் எதிர்திசையில் திடீரெனப் புகுந்து, உயிரிழந்த பெண் உட்பட மூன்று வாகனங்கள் மீது மோதியதே ஆகும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தங்காக் மாவட்ட காவற்படையின் தலைவர் சுப்ரிண்டெண்டன் ரொஸ்லான் முகமட் தாலிப்.
உயிரிழந்த பெண்ணுடன், 14 வயதுச் சிறுவன் உட்பட ஐந்து பேர் பலத்த காயங்களுடன் தங்காக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூன்று வாகனங்களின் ஓட்டுநர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர். இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தற்போது தங்காக் மாவட்டக் காவற்படையினர் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம் 41 (1)-ன் கீழ் தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.








