Oct 18, 2026
Thisaigal NewsYouTube

பெண் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெண் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

ஸ்லிம் ரிவேர், செப்டம்பர் 30-

கடந்த மார்ச் மாதம் தனது முன்னாள் காதலனின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக பெண் ஆசிரியர் ஒருவர், பேரா, சிலிம் ரீவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

41 வயது N. ரேதா என்ற அந்த பெண் ஆசிரியர், மாஜிஸ்திரேட் புல்ராணி கவுர் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

பள்ளி புறப்பாடா நடவடிக்கையின் முதிர்நிலை ஆசிரியரான ரேதா, கடந்த மார்ச் 3 ஆம் தேதி பேரா, முஆலிம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் தனது முன்னாள் காதலனான 35 வயது P. நவநீத் என்பவரின் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 6 மாத சிறை அல்லது மூவாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 447 பிரிவின் கீழ் ரேதா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து ரேதா விசாரணை கோரியிருப்பதால் அவரை நிபந்தனையுடன் 2 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிப்பதற்கு மாஜிஸ்திரேட் புல்ராணி கவுர் அனுமதித்தார்.

வழக்கு விசாரணை முடிவடையும் வரையில் சம்பந்தப்பட்ட நபருக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்று மாஜிஸ்திரேட் புல்ராணி கவுர் நிபந்தனை விதித்தார்.

முன்னதாக, ஒரு நபர் உத்தரவாதத்துடன் 4 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் அந்த ஆசிரியர் விடுவிக்கப்பட வேண்டும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் சியாஹிரா அஸாஹர் அல்ல முன்வைத்துள்ள பரிந்துரைக்கு ரேதா வழக்கறிஞர் N. விலாஷினி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

கடந்த 21 ஆண்டு காலமாக ஆசிரியர் தொழிலில் உள்ள ரேதா , ஒரு தனித்து வாழும் தாயார் ஆவார். அவருக்கு 14 மற்றும் 16 வயதில் இரு பிள்ளைகள் உள்ளனர். ஒரு இருதய நோயாளியான தந்தையும் உள்ளார். இவர்களை பராமாரிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதால் ரேதா -விற்கு விதிக்கப்படும் ஜாமீன் தொகை குறைக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தை வழக்கறிஞர் விலாஷினி வாதாடினார்.

இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →