வெளிநாட்டினருக்கான சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்துள்ள புகார்கள் குறித்து கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
புகார்களின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, தமது துறையின் ஒருமைப்பாட்டுப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஹம்ஷா இன்ஜாவ் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் வெளிநாட்டினர் தங்கும் காலத்தை நீட்டிக்க சிறப்பு அனுமதி அட்டைகள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாகவும், உள்ளூர் இடைத்தரகர்கள் விண்ணப்பங்களைப் பெற்று, கடப்பிதழ்களைச் சேகரித்து, குடிநுழைவு அதிகாரிகளிடம் படங்களை அனுப்பியதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையில் சட்டம் அல்லது விதிமீறல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், பொதுமக்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிநுழைவுத் துறை வழிகள் மூலமாகவே சேவைகளைப் பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.








