சிலாங்கூரில் ரோன்95 பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாகக் கூறப்படும் 10 புகார்கள் தொடர்பில் உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.
இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் வாகனங்கள் பழுதடைந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, நேற்று ஏழு பெட்ரோல் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டதாக அமைச்சின் சிலாங்கூர் மாநில இயக்குநர் முஹமட் ஹானிஃப் அசாரி தெரிவித்தார்.
சோதனையின்போது, 27 கேன்களில் பெட்ரோல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ரசாயனத் துறையின் ஆய்வகப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
சோதனை செய்யப்பட்ட அனைத்து பெட்ரோல் நிலையங்களும் உரிய உரிமங்களைப் பெற்றிருந்ததாகக் குறிப்பிட்ட அவர், விசாரணைக்கு உதவும் வகையில் வணிக ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு நிலைய உரிமையாளர்களுக்கு சட்டப்பூர்வ அறிவிப்பும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பயனீட்டாளர்களின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.








