கோலாலம்பூர், டிசம்பர்.30-
ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், மடானி அரசாங்கம், யாருக்கும் அடிபணியவோ அல்லது அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவோ செய்யாது என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமைச் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்திய அன்வார், அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மாமன்னருடான சந்திப்பில், சமீப காலமாக, உயர்மட்ட அளவில் ஊழலுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்ததாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
நண்பரோ, பகைவரோ யாராக இருந்தாலும், ஊழல் புரிந்தால், மடானி அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்ளாது என்றும், ஊழலுக்கு எதிராக தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
மேலும், மடானி அரசாங்கமானது, நாட்டை ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், அதிலிருந்து மீட்கப்பட்ட நிதிகளை மக்கள் பயனடையும் வகையில் மாற்றும் என்றும் அன்வார் உறுதியளித்தார்.
உயர்மட்டத்திலிருந்து, அடிமட்டம் வரையில், இன்னும் பல பகுதிகள் பழைய கட்டமைப்புகளிலும், கலாச்சார வடிவங்களிலும் சிக்கியுள்ளதாகவும் அன்வார் குறிப்பிட்டார்.
அதே வேளையில், தனது அலுவலகத்தில் பணிபுரியும் நிர்வாகிகள் உட்பட ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள அரசு ஊழியர்கள், இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினருக்கு எதிராக ஊழல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.








