கோலாலம்பூர், ஜனவரி.12-
புதிய கல்வியாண்டில், குழந்தைகளுக்கான பாதுகாப்பான கற்றல் சூழலை உறுதி செய்வதற்காக, பகடி வதைக்கு எதிரான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு தீவிரப்படுத்தும் என்று கல்வித்துறை பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அமினுடின் காசிம் தெரிவித்துள்ளார்.
பகடி வதை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஒரு பாதுகாப்புப் பணிக் குழுவை அமைப்பது உட்பட, இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், பள்ளிகளில் பகடி வதை சம்பவங்கள் நடந்தால், அவற்றைச் சமாளிக்க தாங்கள் சிறந்த முறையில் தயாராக இருப்பதாகவும் அமினுடின் காசிம் உறுதியளித்துள்ளார்.
அவற்றில் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த ஆலோசனை வழங்குதல் மற்றும் ஆரம்ப கால விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்டவையும் அடங்கும்.
மேலும் பள்ளி மாணவர்களிடையே ஒருவரையொருவர் பகடி வதை செய்து கொள்வதை தவிர்க்க, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சக மாணவர்களுக்கிடையே நல்லுறவை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு மாநிலங்களில் உள்ள குரூப் ஏ பள்ளிகளில் நேற்று வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், மற்ற மாநிலங்களில் உள்ள பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
நாடெங்கிலும், நேற்று முதல் எந்த ஒரு பகடி வதைச் சம்பவமும் பதிவாகவில்லை என்றும், அனைத்து பள்ளிகளிலும் சுமூகமான சூழ்நிலையே நிலவி வருவதாகவும் அமினுடின் காசிம் தெரிவித்துள்ளார்.








