கோத்தா பாரு, டிசம்பர்.16-
திரங்கானுவில், இரு கணவர்களுடன் வாழ்வதாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டே, முதல் கணவருடன் விவாகரத்து ஆகிவிட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
30 வயதுடைய அப்பெண்ணையும், 46 வயதுடைய அவரது கணவரையும், மாநில இஸ்லாமிய சமய விவகாரத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்திய பின்னர், இந்த உண்மை தெரிய வந்துள்ளதாக கிளந்தான் மாநில செயற்குழு உறுப்பினர் அஸ்ரி மாட் டாவுட் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, ஒரே முறை தலாக் கூறி, தன் மனைவியை விவாகரத்து செய்து விட்டதை அவரது முதல் கணவர் உறுதிப்படுத்தியுள்ளதாக அஸ்ரி மாட் டாவுட் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அப்பெண் இரு கணவர்களுடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், இது குறித்து யாரும் இனி வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி, சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நல்வாழ்விற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அமைச்சு ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








