மலாக்கா, டிசம்பர்.13-
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வாகனத்திற்கு வழிவிடும் நோக்கில், போலீஸ்காரர் ஒருவர், அவ்வழியே சென்ற ஆம்புலன்சைத் தடுத்து நிறுத்துவது போல் சித்தரிக்கப்பட்ட காணொளியை, சமூக ஊடகத்தில் பரப்பிய நபரைப் போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், இணைய சேவைகளைத் தவறான முறையில் பயன்படுத்தியதற்காக, தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233 - இன் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்படும் என மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஸுல்கைரி முக்தார் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், போலீசாரின் தவறான நடத்தை தொடர்பான தகவல்களைப் பொதுமக்களிடமிருந்து வரவேற்பதாகக் குறிப்பிட்ட ஸுல்கைரி, ஆனால் போலீசாரை அவதூறு செய்யும் எந்தவொரு முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வைரலாகப் பரவிய அந்தக் காணொளியில் கூறப்படுவது போல், சம்பந்தப்பட்ட போக்குவரத்துப் போலீஸ்காரர், ஆம்புலன்சை மறிக்கவில்லை என்றும், அக்காணொளியில் கேட்கும் சைரன் ஒலியானது போலீஸ் வாகனத்தில் இருந்து வந்தது என்றும் ஸுல்கைரி விளக்கமளித்துள்ளார்.








