புத்ராஜெயா, ஜனவரி.18-
நாளை தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், ஒற்றுமை அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான முறையில் விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார். புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கு முந்தைய சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெறும் வருகையை மட்டும் பதிவு செய்யாமல், கடமை உணர்வுடன் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த அமர்வில், மக்கள் நிகராளிகள் தங்களுக்குள் உறவை வலுப்படுத்திக் கொள்வதோடு, மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் ஒருமித்த கருத்துடன் செயல்படவும் விவாதிக்கப்பட்டதாக ஒற்றுமை அரசங்கத்தின் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
இம்முறை நாடாளுமன்றத்தில் பிரதமர் பதவிக் காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்துதல், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட நான்கு முக்கியமான சட்டப் பரிந்துரையைத் தாக்கல் செய்ய அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உரையுடன் நாளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் இந்த 15-வது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத் தொடர், மொத்தம் 20 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி 20 முதல் மாமன்னரின் உரை மீதான விவாதங்கள் ஏழு நாட்களுக்கு நடைபெறும் வேளையில், பிப்ரவரி மாத இறுதியில் அமைச்சர்களின் பதில்களும் பிற அரசு விவகாரங்களும் கையாளப்படும்.








