கோலாலம்பூர், ஜனவரி.08-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மிற்கு எதிராக வர்த்தகர் ஆல்பர்ட் தேய் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
குறிப்பாக, விசாரணையின் போது தன்னைக் கட்டாயப்படுத்தி தடுப்புக் காவலுக்கான ஆரஞ்சு நிற சிறை உடையை அணியச் செய்ததற்காக, எஸ்பிஆர்எம், அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அசாம் பாக்கி மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக ஆல்பர்ட் தேய் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று இந்த சிவில் வழக்கை பதிவு செய்துள்ளார்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில், தன்னை அத்தகைய உடையை அணியச் செய்தது, அரசியலமைப்பின் 5 மற்றும் 8 ஆகிய பிரிவுகளை மீறுவதாகும் என அந்த வர்த்தகர் வாதிடுகிறார்.
நாட்டின் முன்னாள் பிரதமர்களான டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் மற்றும் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் போன்ற உயர்மட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்கள் ஏன் அந்த ஆரஞ்சு சட்டையை அணியவில்லை என்றும், சாதாரண குடிமக்களுக்கு மட்டும் ஏன் இந்த பாகுபாடு என்றும் ஆல்பர்ட் தேய் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆரஞ்சு சட்டையுடன் கைவிலங்கு இடப்பட்டு பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால், தான் மிகுந்த மன உளைச்சலுக்கும் அவமானத்திற்கும் உள்ளானதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மத்தியில் ஆல்பர்ட் தேய் ஏற்கனவே குற்றவாளி என்பது போன்ற பிம்பத்தை உருவாக்கவே எஸ்பிஆர்எம் இவ்வாறு செய்ததாக அவரது வழக்கறிஞர் என். சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.








