கோலாலம்பூர், ஜூலை.18-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் பிறப்பித்துள்ள ஒரு கூடுதல் அரசாணை உத்தரவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அம்னோவின் 160 தொகுதிகளின் தலைவர்கள் ஒரு சேர வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி நாட்டின் 16 ஆவது மாமன்னரான சுல்தான் அப்துல்லா பிறப்பித்துள்ள கூடுதல் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதற்கு பிரதமர் என்ற முறையில் அன்வார் முழு பொறுப்பேற்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
முன்னாள் மாமன்னரின் அரசாணை உத்தரவை அமல்படுத்துவதில் அன்வார் இனியும் சாக்குப் போக்குகளைக் கூறிக் கொண்டு இருக்கக்கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
நேற்று இரவு 8 மணியளவில் கோலாலம்பூரில் உள்ள முன்னணி ஹோட்டலில் திரண்ட நாடு முழுவதும் உள்ள 160 அம்னோ டிவிஷன் தலைவர்கள், பிரதமரிடம் இந்த வேண்டுகோளை விடுத்தனர்.
நஜீப் தமது எஞ்சிய சிறைவாசத்தை வீட்டுக் காவலில் கழிப்பதற்கான ஒரு கூடுதலான அரசாணை உத்தரவு உள்ளது என்ற கடந்த ஜுலை 9 ஆம் தேதி சட்டத்துறை அலுவலகத்தைச் சேர்ந்த முதிர் நிலை வழக்கறிஞர் ஒருவர், கூட்டரசு நீதிமன்ற விசாரணையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து அம்னோ தலைவர்கள், பிரதமர் அன்வாரிடம் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.








