ஜோகூர், கூலாய் பகுதியில் சமிக்ஞை விளக்கில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியதில் 32 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.
ஜோகூர் பாரு– ஆயர் ஹித்தாம் சாலையில் 32 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை 6.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் டான் செங் லீ கூறுகையில், கூலாய் பெசார் பகுதியிலிருந்து ஜோகூர் பாரு நோக்கிச் சென்ற ஹோண்டா ஜாஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை சமிக்ஞை விளக்கில் நின்ற லாரியின் பின்புறத்தில் மோதியது.
காரை ஓட்டிச் சென்ற பெண், மின் வணிக நிறுவனத்தில் பொது ஊழியராகப் பணியாற்றி வந்த நிலையில், படுகாயம் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
லாரியை ஓட்டிய 66 வயது ஆடவருக்கு சொற்ப காயம் ஏற்பட்டது.








