தெலுக் இந்தான், அக்டோபர்.27-
தெலுக் இந்தான், ஜாலான் மாக் இந்தானில் நிகழ்ந்த தீ விபத்தில் தங்கள் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ங்கா கோர் மிங், உடனடி பண உதவிகள் வழங்குவதற்கு ஆவனம் செய்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் என்ற முறையில் ங்கா கோர் மிங், மிகுந்த அலுவல் பழுவில் இருந்த போதிலும், அவர் சார்பாக தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாசீர் பெடாமார் சட்டமன்ற உறுப்பினர் வூ கா லியோங் மூலமாக இத்தகைய உதவி நல்கப்பட்டது.
தொகுதி மக்களின் நலனில் எப்போதுமே தனிப்பட்ட கவனம் செலுத்தக்கூடியவர்களான ங்கா கோர் மிங் மற்றும் வூ கா லியோங், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 6 குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்கு மொத்தம் 12 ஆயிரம் ரிங்கிட்டை வழங்கினர்.
பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான வூ கா லியோங் நேரடியாகச் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், நிலவரத்தைக் கேட்டறிந்த பின்னர் அவர்களுக்கு பண உதவியை நல்கினார்.

பாதிக்கப்பட்டவர்கள் வாடகை வீட்டில் இருப்பதற்கும், பிள்ளைகளின் கல்வி தடைபடாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது என்று வூ கா லியோங் தெரிவித்தார்.
அதே வேளையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தேவையான உதவிகள் நல்குவதில் நிபுணத்துவ முறையில் செயல்பட்ட மாவட்ட அதிகாரி புவான் முஃபிடா தலைமையிலான ஹிலீர் பேராக் பேரிடர் நிர்வாகச் செயலகத்திற்கும் வூ கா லியோங் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.








