ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.03-
மலேசியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டுப் பயணிகளைக் குறி வைத்து 'பகுளி' எனப்படும் பில்லி சூனியம் அல்லது ஹிப்னாடிசம் தொடர்புடைய மோசடிகளில் ஈடுபட்ட கணவன் மனைவி உட்பட 5 ஈரான் நாட்டவர்களை நான்கு நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட பினாங்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையை மாஜிஸ்திரேட் நட்ராதுன் நயிம் முகமட் சைடி வெளியிட்டார்.
பெர்சியாரான் கெர்னி, பூலாவ் தீக்குஸ் போன்ற பகுதிகளில் நேற்று இரவு 8 முதல் 9 மணிக்குள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட இந்த 19 முதல் 34 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், சுற்றுலா விசாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வாகனங்களும் பல்வேறு வெளிநாட்டு நாணயங்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








