Feb 24, 2026
Thisaigal NewsYouTube
கிக் தொழில்துறை பங்குதாரர்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது - அமைச்சர் ரமணன்
தற்போதைய செய்திகள்

கிக் தொழில்துறை பங்குதாரர்களுடனான கலந்தாய்வு அமர்வுகளை அரசாங்கம் தீவிரப்படுத்துகிறது - அமைச்சர் ரமணன்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

நாட்டில் உள்ள லட்சக்கணக்கான கிக் (Gig) பணியாளர்களின் நலன், விரிவான பாதுகாப்பு மற்றும் தொழில்துறை சமநிலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘கிக் பணியாளர் சட்டவரைவு’ தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

வடிவமைக்கப்படும் கொள்கையின் ஒவ்வொரு விவரமும் கள யதார்த்தத்தை பிரதிபலிப்பதை உறுதிச் செய்ய, மனித வள அமைச்சு பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாய்வு அமர்வுகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக மனித வள அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப் பொறுத்தமட்டில், கிக் துறை இப்போது ஒரு தற்காலிகமான துறையாக இல்லாமல், நாட்டின் பொருளாதாரத்தின் முக்கியத் தூணாகவும், பல மலேசியர்களின் வருமான ஆதாரமாகவும் உருவெடுத்துள்ளதால், இத்தகைய உள்ளடக்கிய அணுகுமுறை மிகவும் அவசியமாகும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

“இந்தச் சட்டம் என்பது வெறும் புதிய விதிமுறை மட்டுமல்ல, இது ஒரு நிலையான மற்றும் முற்போக்கான பாதுகாப்புக் கட்டமைப்பாகும். தொழில்துறையின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காமல், பணியாளர்களின் நலன் உறுதிச் செய்யப்படுவதை நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

நேற்று தலைநகரிலுள்ள ஒரு பிரபல உணவகத்தில், துணை அமைச்சர் டத்தோ கைருல் ஃபிர்டாவுஸ் அக்பர் கானுடன் இணைந்து, கிக் துறையின் முக்கிய சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடனான ஒரு சந்திப்பில் அமைச்சர் கலந்து கொண்டார்.

இதில் மலேசிய பி-ஹெயிலிங் பணியாளர்கள் சங்கம், மலேசிய பூமிபுத்ரா ஒப்பனைக் கலைஞர்கள் சங்கம், மலேசிய தேசிய சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம், மலேசிய செவித்திறன் குறைபாடுள்ளோர் நலன் - ஆலோசனை சங்கம் மற்றும் மலேசிய இ-ஹெயிலிங் கூட்டணி (GEM) ஆகியவை கலந்து கொண்டன.

இந்தச் சந்திப்பு, உணவு விநியோகஸ்தர்கள், இ-ஹெயிலிங் ஓட்டுநர்கள், தொழில்முறை ஒப்பனைக் கலைஞர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் கிக் பொருளாதாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மாற்றுத் திறனாளி சமூகம் என நாட்டின் கிக் பொருளாதாரச் சூழலின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது.

Related News