கோலாலம்பூர், ஜனவரி.03-
மைகாட் அடையாள அட்டையில் தங்களது சமூகத்தை, “Baba Nyonya” என மாற்றக் கோரி இதுவரை சுமார் 50 மலேசியர்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசியப் பதிவிலாகாவான ஜேபிஎன் அறிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்களில், முறையான ஆதாரங்களோடு சமர்ப்பித்த 11 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜேபிஎன் இயக்குநர் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஆதாரங்கள் சரிபார்ப்பின் அடிப்படையில் மட்டுமே ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த திருத்தமானது Baba Nyonya சமூகத்தினருக்கு மட்டுமல்லாமல், உள்ளூர் சயாமிய சமூகத்தினருக்கும் வழங்கப்பட்டு வருவதாகவும் பட்ருல் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
கிளந்தான், பேராக், கெடா ஆகிய மாநிலங்களில் சயாமிய சமூகத்தினர் அதிகளவில் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
என்றாலும், தாய்லாந்தில் இருந்து மலேசியாவிற்கு புலம் பெயர்ந்து இங்குள்ள மலேசியர்களைத் திருமணம் செய்த தாய்லாந்து பிரஜைகள், சயாமியராகக் கருதப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது என்றும் பட்ருல் ஹிஷாம் அலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு சீனாவிலிருந்து மலாக்காவிற்குக் குடியேறிய சீனர்கள், உள்ளூர் மலாய் பெண்களை மணந்ததால், அவர்களின் சந்ததியினர் Peranakan அல்லது Baba Nyonya என்று அழைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








