மலேசிய இந்தியர் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் கல்வி நிதி, தமிழ்ப்பள்ளிகளின் கட்டுமானம், பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காகக் கல்வி அமைச்சிடம் வழங்கப்படுவதாக ம.இ.கா. தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மித்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மித்ரா வெளியிட்ட அறிக்கையில், தமது கல்வி நிதி பள்ளிக் கட்டுமானம் அல்லது உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கானதல்ல என்றும், இந்தியச் சமூகத்தினருக்கு நேரடியாகப் பயனளிக்கும் கல்வித் திட்டங்கள் மற்றும் கல்வி இடையீட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்துள்ளது.
இந்தியச் சமூகத்தின் மனிதவள மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, தேசிய கல்வி அறக்கட்டளை மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
அவற்றில், 3 ஆயிரத்து 853 குழந்தைகள் பங்கேற்கும் செலிக் மடானி திட்டமும், 10 ஆயிரத்து 395 மாணவர்களுக்கு மலாய் மொழி, ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களில் கூடுதல் பயிற்சியுடன் மதிய உணவு வழங்கும் கல்வி மடானி திட்டமும் இடம் பெற்றுள்ளன.
மேலும், 361 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 14 வகையான தளவாடப் பொருள்கள் வழங்கப்படுவதுடன், 388 தமிழ்ப்பள்ளிகளுக்கு 400 திறன்மிகு மின்னணுப் பலகைகளும் வழங்கப்பட்டுள்ளதாக மித்ரா தெரிவித்துள்ளது.
அதேவேளையில், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தமிழ்மொழிச் சிறப்புக் கருத்தரங்குகள் மற்றும் கூடுதல் பயிற்சி வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவிகளாக, 5 ஆயிரம் பேருக்கு மடிக் கணினிகளும், முதலாம் ஆண்டு மாணவர்கள் மேலும் 5 ஆயிரம் பேருக்கு தலா 2 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மித்ராவின் கல்வி ஒதுக்கீட்டைத் தமிழ்ப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியாகச் சித்தரிப்பது தவறான தகவல்களைப் பரப்புவதற்குச் சமம் என்றும், திட்டங்களின் உண்மையான வரம்பு மற்றும் செயல்பாட்டு விவரங்களை ஆராயாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது பொறுப்பற்ற செயல் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
எனவே, ம.இ.கா. தலைவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை மீண்டும் மறுத்துள்ள மித்ரா, தன்னைப் பற்றிய விமர்சனங்கள் ஊகங்களின் அடிப்படையில் அல்லாமல், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.








