2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சீ கேம்ஸ் எனப்படும் தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் இரண்டு அல்லது மூன்று விளையாட்டுப் போட்டிகளைச் சேர்ப்பதற்கு மலேசியா எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
சிப்பாங் அனைத்துலக சுற்றுப்பாதையில் இன்று நடைபெற்ற 2026 தேசிய விளையாட்டு தின விழாவைத் தொடங்கி வைத்து உரையாற்றிய அன்வார், இந்தோனேசியா முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தமக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தென்கிழக்காசிய விளையாட்டு சம்மேளனத்தின் நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டால் அதனைப் பரிசீலிக்க மலேசியா தயாராக இருப்பதாகவும் அன்வார் உறுதியளித்துள்ளார்.
அதேவேளையில் கூடுதல் போட்டிகளைச் சேர்ப்பதற்கு மலேசியா ஆதரவு அளிப்பதாகவும், அதற்கான நடைமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட்டு சம்மேளனம் இறுதி முடிவை எடுக்க வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்துள்ளார்.








