கோலாலம்பூர், துன் ரசாக் எக்ஸ்சேஞ் எனப்படும் டிஆர்எக்ஸ் வர்த்தக மையத்திற்கு அருகில், ஒரே நேரத்தில் 4,500 பேர் தொழுகை நடத்தக்கூடிய மஸ்ஜிட் வாரிசான் பள்ளிவாசல் கட்டப்படவுள்ளது.
ஜாலான் டாவிஸ் பகுதியில் சுமார் 1.86 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமையவுள்ள இப்பள்ளிவாசலின் கட்டுமானத் திட்டத்தைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.
இது குறித்துப் பேசிய பிரதமர் துறையின் சமய விவகார அமைச்சர் டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான், நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் ஆன்மிகம் மற்றும் மலாய்-இஸ்லாமியப் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார்.
தோட்டத்திற்குள் அமைந்துள்ள பள்ளிவாசல் என்ற கருப்பொருளில் உருவாக்கப்படும் இது, கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தின் முதல் பாரம்பரியப் பள்ளிவாசலாக அமையவுள்ளது.
இத்திட்டத்திற்கு 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் மொத்தம் 70 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆரம்பகட்டப் பணிகளுக்காக 4.1 மில்லியன் ரிங்கிட் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.








