சிலாங்கூர், கோலா லங்காட்டில் உள்ள எஸ் எம் கே ஜென்ஜாரோம் இடைநிலைப் பள்ளியில், சரியாக வேக வைக்கப்படாத அயாம் கெபுக் உணவை உட்கொண்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்பள்ளியின் சிற்றுண்டிச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
"உறைந்த கோழி இறைச்சியை முறையாக உருக வைக்காமல் சமைத்ததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம்" என விசாரணையில் தெரிய வந்துள்ளதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
பள்ளியின் மாணவர் விவகாரத் துணை முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்ததால், பாதிக்கப்பட்ட 11 மாணவர்களும் ஜென்ஜாரோம் சுகாதார நிலையத்தில் சிகிச்சையும் மருந்துகளும் பெற்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறிப்பிட்ட பள்ளியில் மட்டுமே நிகழ்ந்துள்ளதாகவும், வேறு எந்தப் பள்ளியிலும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், உணவு தயாரிப்பில் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய, மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகளில் திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.








