2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அடுத்த ஆண்டு ஜனவரி 1 அல்லது 2ஆம் தேதிக்குள் செயல்படுத்தத் தொடங்க வேண்டும் எனப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் 2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதனைத் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளரும் தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், ஒதுக்கப்பட்ட பொதுமக்கள் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுவதையும், திட்டங்கள் இலக்கு வைக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதையும் உறுதிப்படுத்த பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகக் கூறினார்.
மேலும், மசோதா நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் நேரடி ஒதுக்கீடாக 459.8 பில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய முதலீட்டு நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளின் முதலீடுகளையும் சேர்த்து மொத்தம் 510 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடும் முதலீடும் இடம் பெற்றுள்ளன.








