தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக தேசிய நல்லிணக்கச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என ஜசெக தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.
1948ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடியது என்றும், அரசாங்கத்தை விமர்சிக்கும் கருத்துகளை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன மற்றும் மத நல்லிணக்கம், அரச நிறுவனத்தின் மதிப்பைப் பாதுகாப்பது அவசியம் என்றாலும், அதற்காகப் பழைய காலனித்துவச் சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், இன மற்றும் மத வெறுப்புக் குற்றங்களைத் தெளிவாக வரையறுத்து, அனைத்து சமூகங்களுக்கும் சமமான பாதுகாப்பை வழங்கும் வகையில் புதிய தேசிய நல்லிணக்கச் சட்டம் அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வாக்குறுதியில் தேச நிந்தனைச் சட்டத்தை ரத்து செய்வதாக பக்காத்தான் ஹராப்பான் உறுதியளித்திருந்ததையும் அவர் சுட்டிக் காட்டினார்.








