கோலாலம்பூர், ஜனவரி.22-
மலேசிய மத்திய வங்கியான பேங்க் நெகாரா, இன்று அறிவித்த தனது OPR வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி 75 விழுக்காட்டிலேயே நிலைநிறுத்துவதாக குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நிதிக் கொள்கையானது நிலையான விலைகளுக்கிடையே பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியின் நாணயக் கொள்கைக் குழு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டில் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்ந்து நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வலுவான உள்நாட்டுத் தேவை இதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.
நிலையான வேலைவாய்ப்பு, ஊதிய உயர்வு மற்றும் அரசாங்கத்தின் வருமானம் சார்ந்த கொள்கைகள் காரணமாக மக்களின் செலவிடும் திறன் வலுப்பெறும். பல்லாண்டு கால உள்கட்டமைப்புத் திட்டங்கள், தேசிய அளவிலான பிரதான திட்டங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் நடைமுறைக்கு வருவது ஆகியவை நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.
தவிர, 2026-ஆம் ஆண்டில் பணவீக்கம் மிதமான அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் கச்சாப் பொருட்களின் விலை மிதமாக இருப்பதால், உள்நாட்டுச் செலவு அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என பேங்க் நெகாரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.








