கோலாலம்பூர், செப்டம்பர்.30-
இத்தாலியைச் சேர்ந்த டயர் தயாரிப்பு நிறுவனம் ஒன்று அளித்த புகாரின் அடிப்படையில், மலேசியாவில் டயர் கடத்தல் மற்றும் ஆவண மோசடியில் ஈடுபட்ட கும்பலின் செயல்பாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
போலியாகத் தயாரிக்கப்படும் டயர்கள் இரகசியமாக மலேசியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக ஐரோப்பிய நிறுவனம் எழுப்பிய கவலைகளைத் தொடர்ந்து உளவுத்துறை இவ்விசாரணையை மேற்கொண்டு வருவதாக எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் டயர் கடத்தல், வரி ஏய்ப்பு உள்ளிட்ட பல குற்றங்களைச் செய்து வந்துள்ள அந்நிறுவனங்களால், அரசாங்கத்திற்கு 350 மில்லியன் ரிங்கிட் வருவாய் இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஓப்ஸ் கிரிப் என்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையின் கீழ் அந்நிறுவனங்கள் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.








