ஜோகூர் பாரு, டிசம்பர்.09-
கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி ஜோகூர் பாரு, தாமான் யுனிவெர்சிட்டியில் உள்ள ஒரு வீடமைப்புப் பகுதியில் வீடொன்றுக்குத் தீயிட்டு, நாச வேலை புரிந்தததாக நம்பப்படும் நபர் ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
வீட்டின் உரிமையாளரான 58 வயது நபர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழி தற்போது தீவிரமாகத் தேடப்பட்டு வருவதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் அஸ்ரோல் அனுவார் நோர் தெரிவித்தார்.
அந்த வீட்டிற்கு அதிகாலை 4.18 மணியளவில் தீயிடப்பட்டுள்ளதாக புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவத்தில் வீட்டின் கீழ் மாடியின் ஒரு பகுதி முற்றாக அழிந்ததாக வீட்டின் உரிமையாளர் புகார் அளித்து இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இந்த நாச வேலையைப் புரிந்த நபர், ஒரு குறிப்பையும் கைவிட்டுச் சென்றுள்ளார். தனது மகனின் கடன் தொடர்பாக எழுந்த தகராற்றின் காரணமாக தனது வீட்டைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்று வீட்டு உரிமையாளர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக சுப்ரிண்டெண்டன் அஸ்ரோல் தெரிவித்தார்.








