கோலாலம்பூர், ஜனவரி.22-
மக்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது, புஞ்சாக் போர்னியோ, GPS நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ Willie Mongin ஆற்றிய உரை தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாய்ப் பரவி வருகிறது. மற்றவர்களின் உணவு கலாச்சாரத்தை இழிவுபடுத்துபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்த அவரது பேச்சுக்கு இணையவாசிகள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.
மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய வில்லி மோங்கின், சரவாக் வாழ் டாயாக் சமூகத்தின் சார்பில் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார். பன்றி இறைச்சியை "அசுத்தம்” மற்றும் "நாற்றமெடுப்பது" எனச் சிலர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேலி செய்வதைச் சுட்டிக் காட்டி அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
“நாங்கள் டாயாக் சமூகத்தினர் ஒரு போதும் மற்றவர்களின் உணவுத் தேர்வுகளை இழிவாகப் பேசியதில்லை. பன்றி இறைச்சி சாப்பிடுவதால் மட்டும் நாங்கள் நாகரிகமற்றவர்கள் என்று அர்த்தமல்ல” என்று அவர் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
மலேசியர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களின் உணவு கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் என்றும், ஒருவரைச் சாடுவதற்காக உணவை ஒரு கருவியாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
சில உணவுகளின் நாற்றத்தை மட்டும் வைத்து அதனைத் தரம் தாழ்த்தக்கூடாது என விளக்கிய அவர், "பன்றி இறைச்சி நாற்றமெடுப்பதாகக் கூறுபவர்கள் ஒன்றை உணர வேண்டும்; நெத்திலி மீன் சாறான புடு (Budu) மற்றும் பெலாச்சான் (Belacan) கூட பன்றி இறைச்சியை விட அதிக துர்நாற்றமுடையவைதான். ஆனால், நாங்கள் அவற்றை ஒரு போதும் இழிவுபடுத்தியதில்லை. மாமன்னரின் கட்டளைப்படி, நாட்டில் இணக்கமான சூழலை உருவாக்க நாங்கள் ஒருவரை ஒருவர் மதிக்கிறோம்," என்றார் அந்த டாயாக் பூர்வக்குடி எம்.பி.
Willie Mongin-னின் இந்த உரை அடங்கிய காணொளிகள் டிக் டாக் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் வைரலாகி வருகின்றன. "நேரடியான மற்றும் உண்மையான பேச்சு", "மலேசியாவின் பன்முகத்தன்மையை உணர்த்தும் உரை" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, உணவுப் பழக்கவழக்கங்களை வைத்து ஒருவரின் குணாதிசயத்தையோ அல்லது நாகரிகத்தையோ மதிப்பிடக்கூடாது என்ற அவரது கருத்துக்குப் பல இன மலேசியர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் ஒலிக்கப்பட்ட இந்தத் துணிச்சலான குரல், இன மற்றும் மதங்களைக் கடந்து பரஸ்பர மரியாதையை வலியுறுத்துவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.








