ஷா ஆலாம், ஜனவரி.23-
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டிலிருந்து சுமார் 50 டன் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியை மலேசியாவிற்கு கடத்தி வருவதற்கான முயற்சியை அதிகாரிகள் முறியடித்தனர்.
அத்தகைய பொருட்களை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள 14 நாடுகளில் ஸ்பெயினும் ஒன்றாகும்.
கடந்த ஜனவரி 20-ஆம் தேதி, Port Klang-ல் உள்ள West Port-இல், இரண்டு கொள்கலன்களை ஆய்வு செய்த எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ் அதிகாரிகள், சுமார் 6 லட்சத்து 60 ஆயிரத்து 137 ரிங்கிட் மதிப்புள்ள பன்றி இறைச்சியைக் கண்டறிந்தனர்.
அந்த இரண்டு கொள்கலன்களையும், அதிகாரிகள் ஆவணப்படுத்த முயன்ற போது, சந்தேகத்திற்குரிய வகையில் அவை இருந்ததாக ஏகேபிஎஸ் தலைமை இயக்குநர் ஷுஹைலி ஸையின் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு, பன்றி இறைச்சியின் விற்பனை அதிகம் என்பதால், இத்தகைய கடத்தல் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் ஷுஹைலி ஸையின் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, இந்த பன்றி இறைச்சியை இறக்குமதி செய்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.








