ஈப்போ, ஜூலை31-
பேரா, பீடோர் அருகில் கம்போங் பசார் பீடோர் என்ற இடத்தில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு துப்பாக்கி மற்றும் தோட்டாக்ளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று இரவு 9.20 மணியளவில் அப்பகுதியில் துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாக ஆடவர் ஒருவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டதாக தாப்பா மாவட்ட போலீஸ் தலைவர் ஜொஹாரி யாஹ்யா தெரிவித்தார்.
இச்சோதனைக்கு பேரா மாநில போலீஸ் தலைமையகத்தின் தடயவியல் போலீஸ் பிரிவு பயன்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த இது சகோதரர்களின் இரட்டை மாடி வீட்டை சோதனையிட்டதில் புள்ளி 38 ஸ்மித் & வெஸ்சன் ரகத்திலான ஒரு ரிவால்வர் துப்பாக்கி, நான்கு தோட்டாக்கள் ஆகியவை வீட்டின் படுக்கை அறையில் மெத்தைக்குள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜொஹாரி யாஹ்யா மேலும் கூறினார்.
விசாரணைக்கு உதவும் வகையில் 45 மற்றும் 46 வயதுடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த இரண்டு சகோதரர்களுக்கும் போதைப்பொருள் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் 10 க்கும் மேற்பட்ட குற்றப்பதிவுகள் இருப்பதாக ஜொஹாரி யாஹ்யா குறிப்பிட்டார்.
இரு சகோதர்களுக்கும் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையில் ஒருவர் methamphetamine போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.








