கோலாலம்பூர், ஜனவரி.25-
கோலாலம்பூர், தாமான் கொபேனா பகுதியில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த கார் கழுவும் நிலையங்களையும் நீண்ட நாட்களாகக் கைவிடப்பட்டிருந்த கடைகளையும் கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம் அதிரடியாக இடித்து அகற்றியுள்ளது. இடத்தைக் காலி செய்யுமாறு 14 நாட்கள் அவகாசம் அளித்து இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், உரிமையாளர்கள் அதனைப் பொருட்படுத்தாததால், காவற்படை, TNB, Air Selangor Sdn Bhd ஆகியோரின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த இடிப்பு நடவடிக்கையின் போது அங்கிருந்த மின்சாதனப் பொருட்கள், காற்றழுத்தக் கருவிகள் உள்ளிட்ட வணிக உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு மாநகராட்சி மன்றத்தின் சேமிப்புக் கிடங்கிற்கு மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இடையூறாக அமையும் இத்தகைய சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும், புகார்கள் ஏதேனும் இருந்தால் பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தெரிவிக்கலாம் என்றும் மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.








