டிஏபி கட்சியைக் கண்டு மலாய்க்காரர்கள் அச்சப்படுவதற்கு காரணமே இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரான அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார். அதேவேளையில் மலேசியா, மலேசியர்களுக்கே என்ற டிஏபி யின் கோட்பாடானது, இந்த நாட்டில் மலாய்க்காரர்களின் அந்தஸ்தை அகற்றுவதற்காக வரையப்பட்ட சுலோகம் அல்ல என்பதையும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் மரியோட் ஹோட்டலில் நடைபெற்ற டிஏபி யின் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய பேராளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அந்தோணி லோக் மேற்கண்டவாறு கூறினார். மலேசியா மலேசியர்களுக்கே என்ற கோட்பாடானது, டிஏபி முன்பு முன்னெடுத்த போராட்டத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட சுலோகமாகும் என்பதையும் அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
மலேசியா எப்போதுமே மலேசியர்களுக்கே சொந்தமாகும். மலேசியா, மலேசியர்களுக்கு சொந்தமில்லை என்றால் பின்னர் அது யாருக்கு சொந்தம் என்றும் அந்தோணி லோக் வினவினார். இந்த சுலோகத்தை கண்டு மலாய்க்காரர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் எந்த சிறப்பு சலுகையும் அகற்றப்படாது என்பதையும் அந்தோணி லோக் விளக்கினார்.
டிஏபி யின் இந்த பேராளார் மாநாட்டின் தொடக்க விழாவிற்கு பாரிசான் நேஷனல் மற்றும் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சிறப்பு வருகை புரிந்தார். டிஏபி வரலாற்றில் அதன் பேராளர் மாநாட்டிற்கு அம்னோ தலைவர் ஒருவர் வருகை புரிந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.








