கோலாலம்பூர், ஜனவரி.24-
சமூக அடிப்படையிலான சுகாதாரப் பராமரிப்பு மாதிரியை இலக்காகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
முதன்மை சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதையும், பொது சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இந்தச் செயலாக்கத்தில் சுகாதார அமைச்சும், பொதுப்பணி அமைச்சும் ஈடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், பினாங்கில் உள்ள பண்டார் தாசேக் முத்தியாரா சுகாதார மையமும் ஒன்றாகும் என்றும் டாக்டர் ஸுல்கிஃப்லி தெரிவித்துள்ளார்.
இந்த டைப் 3 மருத்துவமனையானது இந்த ஆண்டின் இறுதிக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட மாக் மண்டின் சுகாதார மையத்தின் டைப் 3 கட்டுமானப் பணிகள், வரும் 2028-ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2026 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் குபாங் செமாங் டைப் 2 சுகாதார மையம் மற்றும் மத்திய செபராங் பிறை ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் ஆகியவற்றின் கட்டுமானத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஸுல்கிஃப்லி, இதற்காக மொத்தம் 94.6 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.








