கோலாலம்பூர், ஜனவரி.24-
நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சான KPKT தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது.
இதற்கான திட்ட வரைவு செயல்முறையில் ஒவ்வொருவரின் கருத்தும், கருத்தில் கொள்ளப்படுவதை, உறுதிச் செய்வதற்காக, உள்ளூர்வாசிகள், கல்வியாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் தொழில் வல்லுநர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெறும் என்று அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
இந்த மசோதாவானது புறக்கணிக்கப்பட்ட நகர்ப்புறங்களில், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதையும், உள்ளூர் சமூக பொருளாதாரங்களை புத்துயிர் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதே வேளையில், இந்த அமர்விலிருந்து பெறப்பட்ட ஒவ்வொரு கருத்தையும் தொடர்ந்து ஆய்வு செய்து, அசல் உரிமையாளர்களின் உரிமைகளை இன்னும் விரிவான முறையில் உறுதி செய்வதற்கான மசோதாவை அமைச்சு மேம்படுத்தும் என்றும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.
இந்த செயல்முறை இறுதிக்கட்டத்தை எட்டிய பிறகு, மசோதா மேம்படுத்தப்பட்ட வடிவத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் ங்கா தெரிவித்தார்.
இந்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பானது, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி முன்வைக்கப்பட்டது. ஆனால் எந்த விவாதமும் இன்றி அடுத்த அமர்வுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய நகர்ப்புற மறுமேம்பாட்டு சட்ட மசோதாவை மீட்டுக் கொள்ள அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நேற்று அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் அறிவித்தார்.
இந்த மசோதாவில் தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே இது மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.








