கோலாலம்பூர், ஜனவரி.23-
மனித வள அமைச்சின் கீழ் செயல்படும் மனித வள மேம்பாட்டுக் கழகமான எச்ஆர்டி கோர்ப்பின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் அப்துல் அஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் நியமனம், இன்று ஜனவரி 23 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பல்வேறு துறைகளில் பரந்த தலைமைத்துவ அனுபவம் கொண்ட டத்தோ முஹமட் ஷாமிர், நிறுவன மேலாண்மை மற்றும் வியூகத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிறந்த தடம் பதித்தவர் என்று எச்ஆர்டி கோர்ப் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, தேசிய நுண்கடன் நிறுவனமான அமானா இக்தியார் மலேசியாவின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அங்கு செயல்பாடுகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுத்ததில் டத்தோ முஹமட் ஷாமிர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
டத்தோ ஷாமிர், மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நகர்ப்புற மற்றும் பிராந்திய திட்டமிடலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இது கொள்கை திட்டமிடல் மற்றும் நிலையான மேம்பாடு ஆகியவற்றில் அவருக்கு நிபுணத்துவத்தை வழங்கியுள்ளது.
தேசிய முன்னுரிமைகள் மற்றும் மாறிவரும் உழைக்கும் வர்க்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், திறன் மேம்பாடு மற்றும் மனித மூலதன நிலைத்தன்மையை எச்ஆர்டி கோர்ப் தொடர்ந்து முன்னெடுத்து வரும் வேளையில் டத்தோ முஹமட் ஷாமிரின் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.








