மக்களின் நலனுக்காகச் செயல்படும் நல்ல தலைவர்களைப் பதவி விலகக் கோருவதற்குப் பதிலாக, அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் பதவி விலக வேண்டும் என்று சிலர் கோருவதைச் சுட்டிக் காட்டிய அன்வார், அவரைப் போன்ற மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் நாட்டுக்குத் தேவை என்றார். ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில், டாக்சி, வாடகைக் கார் மற்றும் பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அன்வார், இந்த உதவிக்காகச் சிறப்புத் தொடர் வாகனப் பதிவு எண்கள் விற்பனை மூலம் திரட்டப்பட்ட 91 மில்லியன் ரிங்கிட் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வீட்டுக் காவல் தொடர்பான விவகாரத்தில், முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு அல்ல; கூட்டரசு அரசியலமைப்பின்படி மாமன்னருக்கு உரியது என்று தாம் அந்தோணி லோக்கிடம் தெரிவித்ததாகவும் அன்வார் கூறினார்.








