பேராக் மாநில அரசாங்கத்தில் முஸ்லிம் அல்லாதோர் விவகாரங்களைக் கவனிக்கும் தனிப் பிரிவு தொடர்ந்து செயல்படும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் உறுதியளித்துள்ளார்.

ஈப்போவில் உள்ள உணவகம் ஒன்றில், சீக்கிய அமைப்புகளுக்கு 7 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கிய நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

முஸ்லிம் அல்லாதோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கவனிக்கத் தனிப் பிரிவு அமைக்க வேண்டும் என்ற தமது கோரிக்கையை ஏற்று மாநில அரசு இந்தப் பிரிவை உருவாக்கியதாக சிவநேசன் கூறினார்.
இந்தப் பிரிவின் மூலம் இந்தியர்கள், சீனர்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் பயனடைந்து வருவதாகவும், ஆலயப் பிரச்சினைகள், கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் கையாளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

அனைத்து இன மக்களையும் சமமாக நடத்தும் அணுகுமுறையைப் பேராக் மாநில அரசு தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.








