முன்னாள் யாயாசான் பேங்க் ரக்யாட் தலைவர் டத்தோ ஶ்ரீ நாசிர் அக்தார் ஹுசேன், சொத்துகளை அறிவிக்கக் கோரும் அழைப்பாணையைப் பெறுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் சுமார் இரண்டு மணி நேரம் இருந்தார்.
எஸ்பிஆர்எம் சட்டம் 2009-இன் 36ஆவது பிரிவின் கீழ் இந்த அறிவிப்பு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த அழைப்பாணையை எதிர்த்து, அதனைச் செயல்படுத்துவதைத் தடுக்கக் கோரி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர்கள் நேற்று மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நீதிமன்ற மனு நிலுவையில் இருந்தாலும் தம்மை எஸ்பிஆர்எம் கைது செய்யக்கூடும் என்று குறிப்பிட்ட அவர், சட்ட நடைமுறையை மதித்து செயல்படுமாறு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டார்.
கடந்த அக்டோபர் 1ஆம் தேதி, சுமார் 10 மில்லியன் ரிங்கிட் முதலீடு தொடர்பான கூட்டு நடவடிக்கை மற்றும் அதிகார துஷ்பிரயோகச் சந்தேகங்கள் குறித்து விசாரிக்க, இரு தொழிலதிபர்கள் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.








