கோலாலம்பூர், ஜூலை.24-
கம்போடியா, நோம்பென் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிரிட்டனுக்குப் போதைப்பொருளைக் கடத்த முயற்சி செய்த போது, கம்போடியா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அந்த 6 மலேசியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
நோம்பெனில் 6 மலேசியர்கள் பிடிபட்டது தொடர்பில் மலேசிய வெளியுறவு அமைச்சான விஸ்மா புத்ரா மூலமாக அறியப்பட்டாலும், கம்போடியா போலீசாரிடமிருந்து எந்தவோர் அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட மலேசியர்கள் குறித்து மேலும் விபரங்களைப் பெறுவதற்கு அந்த நாட்டில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாகத் தகவல்களைப் பெறும் முயற்சியில் புக்கிட் அமான் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவைத் தளமாகக் கொண்டுச் செயல்படும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கும், பிடிபட்ட 6 மலேசியர்களுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து இதுவரை தங்களால் உறுதிப்படுத்த இயலவில்லை என்று டத்தோ ஹுசேன் மேலும் கூறினார்.








