முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனை மன்னிப்பு உத்தரவைச் செயல்படுத்துவதில் எழுந்துள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து விளக்கமளிக்க, மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை உடனடியாகச் சந்திக்குமாறு சட்டத்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் டுசுக்கி மொக்தாருக்கு பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, எஸ்ஆர்ஸி இண்டர்நேஷனல் வழக்கில் நஜிப்பின் எஞ்சிய சிறைத்தண்டனையை அனுபவிப்பது தொடர்பான அம்சங்களையும், அவருக்கு எதிரான மற்றொரு முக்கிய வழக்கான 1எம்டிபி வழக்கில் அதன் தாக்கத்தையும் மாமன்னரிடம் விளக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப மாதக் கொண்டாட்டத்தை இன்று சனிக்கிழமை தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார் இப்ராஹிம், நிபந்தனை மன்னிப்பு உத்தரவு எஸ்ஆர்ஸி வழக்கிற்கு மட்டுமே பொருந்துமா? அல்லது 1எம்டிபி வழக்கிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதில் வெவ்வேறு விளக்கங்கள் முன்வைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
அதேவேளையில், சிலர் தண்டனைக் காலம் 2028-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் எனக் கூறுவதாகவும், மற்றொரு தரப்பினர் நீதிமன்றம் பிணை வழங்கவில்லை என்று சுட்டிக் காட்டுவதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.
அதன் படி, இந்த விவகாரத்தில் நீதித்துறை இறுதியான முடிவை எடுக்க கால அவகாசம் தேவைப்படுவதாகவும், இது தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல என்றும் அவர் விவரித்துள்ளார்.








