கோலாலம்பூரிலிருந்து ஹாங்காங் சென்ற 36 வயது ஆடவர் ஒருவர், தனது காலணிக்குள் மறைத்து வைத்து ஒரு கிலோ கொக்கைன் போதைப்பொருளைக் கடத்த முயன்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் அணிந்திருந்த காலணிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மதிப்பு சுமார் 6 லட்சம் ஹாங்காங் டாலர்கள் அதாவது மலேசிய மதிப்பில் 3 லட்சத்து 11 ஆயிரம் ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே, ஹாங்காங் சட்டத்தின்படி போதைப்பொருள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையுடன் 5 மில்லியன் ஹாங்காங் டாலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் எனச் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.








