தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் துறைகளுக்கு, குறிப்பாக பணை எண்ணெய் தோட்டங்களில் அறுவடைப் பணிகளுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களை அனுமதிப்பதில் விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் எனப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோலாலம்ம்பூரில் நடைபெற்ற 14-ஆவது இல்முவான் மலேசியா மடானி கருத்தரங்கு நிகழ்ச்சியில் உரையாற்றிய அன்வார், பனை எண்ணெய் பழங்களை அறுவடை செய்வது போன்ற குறிப்பிட்ட பணிகளுக்குத் தொழிலாளர்கள் தேவைப்பட்டால் அனுமதி வழங்கலாம் என்றார்.
அதேவேளையில், எதிர்காலத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இயந்திரமயமாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிறுவனங்கள் உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அதிக லாபம் ஈட்டும் பெரிய தோட்ட நிறுவனங்கள் ஏன் இயந்திரமயமாக்கலில் போதிய முதலீடு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பிய அன்வார், ஒரு நிறுவனம் 1 பில்லியன் ரிங்கிட் லாபம் ஈட்டியிருந்தும் தொழிலாளர்களின் மாதச் சம்பளத்தை வெறும் 20 ரிங்கிட் உயர்த்தக்கூட முன்வரவில்லை என்றும் விமர்சித்தார்.
அத்துடன் வெளிநாட்டுத் தொழிலாளர்களை அடிமைகளைப் போல நடத்துவதையும், அவர்களின் கடப்பிதழ்களைப் பறிமுதல் செய்வது, சம்பளத்தை முகவர்கள் அபகரிப்பது, அதிகப்படியான வேலைவாய்ப்புக் கட்டணம் வசூலிப்பது போன்ற சுரண்டல்களையும் அவர் கடுமையாகக் கண்டித்தார்.
மேலும், வெளிநாட்டுத் தொழிலாளர்களும் மனிதர்கள் தான், அவர்கள் அடிமைகள் அல்ல எனக் குறிப்பிட்ட அன்வார், அவர்களைச் சுரண்டும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








