டிபிஎஸ் எனப்படும் டெர்மினல் பெர்செபாடு செலாத்தான் பேருந்து முனையத்தில், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் சுமார் 1.75 லட்சம் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 20 விழுக்காடு அதிகமாகும்.
நேற்று தொடங்கி வரும் நவம்பர் 11-ஆம் தேதி வரை ஏழு நாட்களில் இந்த எண்ணிக்கை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக டிமாஸ் செண்டிரியான் பெர்ஹாட் (TMAS Sdn Bhd) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஷாஸ்வான் முஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளொன்றுக்கு சராசரியாக 25 ஆயிரம் பயணிகள் வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பயணிகளின் வருகை அதிகரிப்பதால், முனையத்தின் செயல்பாடுகளைச் சீராகக் கையாள கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதில் தற்காலிகப் பணியாளர்களும் பணியமர்த்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இணையவழி டிக்கெட் விற்பனை நிறுவனங்களும் தங்களது தளங்கள் மூலம் டிக்கெட் வாங்கிய பயணிகளுக்கு உதவுவதற்காக, டிபிஎஏ முனையத்தில் சொந்தப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஷாஸ்வான் முஹமட் குறிப்பிட்டுள்ளார்.








