முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் வசிக்கும் கோலாலம்பூர், ஜாலான் லங்காக் டுத்தா இல்லம் அதிகாரப்பூர்வமாகச் சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், சிறைச்சாலைகள் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான அரசிதழ் அறிவிப்பை சட்டத்துறை தலைமை அலுவலகமான ஏஜிசி நேற்று வெளியிட்டது.
அதன்படி, தாமான் டுத்தா பகுதியில் அமைந்துள்ள நஜிப்பின் இல்லத்தின் கட்டிடங்கள் மற்றும் வளாகம் உள்ளிட்ட மொத்தம் 4,559 சதுர மீட்டர் பரப்பளவு சிறைச்சாலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்படி காவலில் வைக்கப்படும் அல்லது சிறைத்தண்டனை அனுபவிக்கும் நபர்களை அடைத்து வைப்பதற்கான நோக்கத்திற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.








