சிரம்பான், ஜனவரி.16-
தமது பள்ளியைச் சேர்ந்த நான்கு மாணவர்கள் மீது உடல் ரீதியான பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஆரம்பப் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினார்.
41 வயதான கமால் நிக் இஸ்மாயில் என்ற அந்த ஆசிரியர், நீதிபதி சுரிதா புடின், முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை, செனவாங்கில் உள்ள பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரியர் இக்குற்றங்களைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனஜ் மற்றும் பிரம்படி விதிக்க குற்றவியல் சட்டம் வகை செய்கிறது.








